மலேசியாவில் உள்ள பலருக்கு மிகவும் பரிச்சயமான பெயர்கள்
சில உண்டு. அந்தப் பெயர்களில் சில கப்பல்களின் பெயர்களும்
அடங்கும்.
அவற்றில் மிகவும் புகழ் வாய்ந்த பெயர் - 'ரஜூலா'.
தமிழர்களால் மிகச் செல்லமாக 'ரசூலாக் கப்ப' என்று அழைக்கப்
பட்ட கப்பல்.
கடாரம், ஸ்ரீவிஜயம், இலங்காசோகம் போன்ற நாடுகள் மலாயாவில்
இருந்த காலத்திலேயே பாய்மரக் கப்பல்களில் தமிழர்கள் வரப்போக
இருந்திருக்கின்றனர்.
அவர்களுடைய கப்பல்கள் மிகவும் பெரியவை; சிறப்புமிக்கவை.
எண்ணிக்கையிலும் அதிகம் இருந்திருக்கின்றன. கம்போடியா, ஜாவா
ஆகிய இடங்களில் உள்ள புடைப்புச்சிற்பங்களில் இந்தக் கப்பல்களைக்
காணலாம். அவற்றின் படங்களைக் காணவேண்டின் அகத்திய
ஆவணத்தைக் கிளறிப் பார்க்கலாம்.
ஆகையால்தான் மலாய் மொழி, இந்தோனேசிய மொழி ஆகியவற்றில்
கப்பலை 'கெப்பால்' என்று குறிப்பிடுகிறார்கள். எப்போதுமே ஒரு தமிழ்ச்
சொல்லோ சம்ஸ்கிருதச்சொல்லோ மலாய் மொழிக்குள் செல்லும்போது
இரண்டாவது அட்சரம் நெடிலாக மாறும். மலர்- மெலோர்;
படகு - பெராஹ¤; முதல் - மோடால்; கடை - கெடாய்; சகல - செகால....
இப்படி......இப்படி.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இரும்பால் ஆன
நீராவிக்கப்பல்கள் வழக்கத்திற்கு வந்தன. அப்போதுதான்
'சஞ்சிக்கூலிகள்' என்ற பெயரில் லட்சக்கணக்கான தமிழர்கள்
மலாயாவுக்கும் சுமாத்ராவுக்கும் கொண்டுவரப்பட்டனர்.
ஆங்கிலேயெர்களின் ஆதரவில் லேவாதேவித் தொழில்
செய்வதற்காக செட்டிநாட்டிலிருந்து நாட்டுக்கோட்டை நகரத்தார்கள்
வந்தனர். அவர்களுடன் வேளாளர், யாதவர், கள்ளர், வல்லம்பர் போன்ற
குடியினரும் வந்தனர். தமிழகத்தின் கரையோரப் பட்டினங்களிலிருந்து
தமிழ் முஸ்லிம்கள் வந்தனர். இவர்கள் வர்த்தகங்களைச் செய்துவந்தனர்.
யாழ்ப்பாணம், கேரளம், ஆந்திரம் ஆகிய இடங்களிலிருந்தும் குறைவான
எண்ணிக்கைகளில் வந்தனர். சீக்கியர்கள் போலீஸ், பட்டாளம், காவல்,
பால்வியாபாரம் போன்ற துறைகளில் ஈடுபட்டார்கள்.
தமிழர்களில் பெரும்பான்மையினர் கூலிவேலைகளில் ஈடுபடுத்தப்
பட்டனர்.
இந்தப் போக்குவரத்துக்காக சில கப்பல்கள் விடப்பட்டன.
அவற்றில் பல கப்பல்கள் பெயர் தெரியாமலேயே போய்விட்டன.
மனதில் நிற்கக்கூடியவை ரோணா, அரோண்டா, ரஜூலா,
ஜலகோபால், ஜல உஷா, ஸ்டேட் ஆ·ப் மெட்ராஸ், எம்.வி.சிதம்பரம்
ஆகியவை.
இவற்றில் ரோணாவும் அரோண்டாவும் மூழ்கிவிட்டன.
முதலில் ரோணாவும் ரஜூலாவும் இணைந்து ஓடின.
பின்னர் ரஜூலாவும் ஜலகோபாலும் போட்டி போட்டுக்கொண்டு ஓடின.
வெவ்வேறு கம்பெனிகள்.
பின்னர் ஜலகோபாலுக்குப் பதில் ஸ்டேட் ஆ·ப் மெட்ராஸ் கப்பல்
ஓடியது.
ஏற்கனவே கப்பல் பிரயாணத்தைப் பற்றி எழுதியிருக்கிறேன்.
இப்போது எங்களில் பலரின் வாழ்வில் ஒரு முக்கிய பங்கை வகித்த
கப்பலைப் பற்றி சொல்லப்போகிறேன்.
எஸ்.எஸ். ரஜூலா.
'எஸ்.எஸ்.ரஜூலா' எனப்படும் அந்தக்கப்பல் 1923-ஆம் ஆண்டில்
பார்க்லேய் கம்பெனி என்னும் கம்பெனியால் கட்டப்பட்டது. அப்போதே
அது இரண்டரை லட்சம் சவரன்கள் விலைக்கு வாங்கப்பட்டதாகப்
பெருமையாகச்சொல்வார்கள். அதனுடன் ரோணா என்னும் கப்பலும்
கட்டப்பட்டது. இரண்டும் அரை மில்லியன் சவரன்கள் பெறுமானம்.
இரண்டுமே 1927-ஆம் ஆண்டில் சென்னைக்கும் பினாங்குக்கும்
இடையே விடப்பட்டதாகச் சொல்வார்கள். என்னுடைய தந்தையார்
அந்தக் கப்பலில்தான் பினாங்கு மார்க்கமாக இந்தோனேசியாவிலுள்ள
மீடானுக்குச் சென்றிருக்கிறார். 1927-ஆம் ஆண்டிலிருந்து அவருடைய
டயரி மீடானில் தொடங்குகிறது.
ரஜூலாக் கப்பல் புதுக் கருக்கு அழியாமல் இருந்தபோது அதில்
பிரயாணம் செய்திருக்கிறார்.
1900-இலிருந்து இரும்புக்கப்பல்கள் ஓடிக்கொண்டுதான் இருந்தன.
ஆனால் அவை வகமாகவும் செல்லவில்லை. சிறியதாகவும் இருந்தன.
ரஜூலாவும் ரோணாவும் ஒரே சமயத்தில் கட்டப்பட்டு இரண்டும்
ஒன்றாகவே வந்து சேர்ந்தன.
அப்போது இந்தியா பிரிட்டிஷ் வசமிருந்தது. கல்கத்தாவே
இந்தியாவின் தலைநகரம். பர்மாவும் இந்தியாவுடன்தான் இருந்தது.
'ஸ்ட்ரேய்ட்ஸ் ஸெட்ல்மெண்ட்ஸ்' என்ற பெயரில் மலாயாவில் பினாங்கு,
மலாக்கா, சிங்கப்பூர் ஆகியவற்றை பிரிட்டிஷ் தம் ஆட்சியில் வைத்திருந்தது.
பின்னர் நான்கு சுல்த்தானிய மாநிலங்களைத் தன் ஆட்சியில் கொணர்ந்தது.
பின்னர் இன்னொன்றும் சேர்ந்தது. 1910-இல் மேலும் நான்கு சுல்த்தானிய
மாநிலங்கள் தாய்லந்திலிருந்து பிரிக்கப்பட்டு இணைத்துக்கொள்ளப்பட்டன.
அப்படி உருவாகியதுதான் பிரிட்டிஷ் மலாயா எனப்படுவது.
இதுபோக போர்னியோத் தீவிலுள்ள சராவாக், வடபோர்னியோ
ஆகியவையும் பிரிட்டிஷ் வசமே இருந்தன. அதற்கும் அப்பால் ஹாங்க்காங்,
ஷாங்ஹாய் ஆகியவை இருந்தன. ஹாங்காங் என்பதும் சிங்கப்பூரும்
'க்ரௌன் காலனி' என்னும் சிறப்பு அந்தஸ்த்தைப் பெற்றவை. சுலபமாகக்
கழட்டிக்கொண்டு வந்துவிடமுடியாது. அதற்கெல்லாம் ரொம்பக் குள்ளநரித்
தந்திரம் வேண்டும். ஏமாற்றவேண்டும். இரண்டகம் செய்யவேண்டும்.
இல்லையெனில் பயமுறுத்தவேண்டும்.
அந்தக் காலத்தில் 'இம்ப்பீரியல் மெயில் ஸர்வீஸ்' என்ற அரசுத் துறை
இருந்தது. உலகம் முழுவதும் செயல்பட்டு வந்தது. லண்டனிலிருந்து
பொருள்கள், கடிதங்கள், அறிக்கைகள், உத்தரவுகள் எல்லாம் கப்பல்
வழியாக வரும்.
இந்த இம்ப்பீரியல் மெயில் ஸர்வீஸில் முக்கிய அங்கமாக
விளங்கியது லண்டன் - பம்பாய், பம்பாய்-சென்னை, சென்னை-சிங்கப்பூர்,
சிங்கப்பூர்-ஹாங்காங் இணைப்பு.
பம்பாயிலிருந்து இந்தியா முழுமைக்கும் ஒரு பெரிய நெட்வர்க்
இருந்தது. அது வேறு.
கப்பல்கள் லண்டனிலிருந்து புறப்பட்டு, ஸ்பேய்னைச் சுற்றிக்
கொண்டு, ஜிப்ரால்ட்டரைத் தாண்டி, மத்தியதரைக் கடலுக்குள் பிரவேசித்து,
மால்ட்டா வந்து, அங்கிருந்து சூயெஸ் கால்வாய் வழியாக செங்கடலுக்கு
வந்து, ஏடன் துறைமுகத்தில் தங்கி, அங்கிருந்து கிஜுகிஜுவென்று
பம்பாய்க்கு வந்து சேரும்.
ஒரு மாதத்துக்கு இரண்டு முறைகள் இவ்வாறு கப்பல்கள்
லண்டனிலிருந்து வரும்.
கடிதங்கள் வகையறாக்களை ஒரு விசேஷ எக்ஸ்ப்ரெஸ் ரயில்
மூலமாகச் சென்னைக்கு அனுப்புவார்கள்.
அந்த எக்ஸ்ப்ரெஸ் ரயிலை அனுசரித்து ரஜூலா அல்லது ரோணா
சென்னையிலிருந்து புறப்படும். ஆகவே மாதத்துக்கு இரண்டு முறை
சென்னையிலிருந்து பினாங்கு/சிங்கப்பூருக்குக் கப்பல்கள் செல்லும்.
Monday, December 20, 2010
கப்பலின் கதை
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment