Wednesday, October 27, 2010

இலக்கியம்

இலக்கிய வளர்ச்சி


காலங்கள் தோறும் அமைந்த பின்புலங்களால் உருவாகிய படைப்புகள், ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு வகையான போக்கில் வளர்ந்தன.


தொடக்கக் காலத்தில், உண்ட மகிழ்ச்சி அல்லது இன்னோரன்ன மகிழ்ச்சியில் கூட்டமாக இருந்து ஓசை எழுப்பிப் பாடுவது ஒரு மரபாக இருந்தது. அவ்வாறு வாய்மொழிப் பாடல்கள் வளர்ந்தன. பின்னர்ப் பொழுதுபோக்குக் கூறாகக் கதை சொல்லுதலும், சுற்றியிருந்து அதைக் கேட்டலும் மரபாகியது. பிற்காலத்தில் காப்பியங்கள் பல தோன்றுவதற்கு அவை அடிப்படையிட்டன. உலகப் புகழ்பெற்ற ஹோமரின் (Homer) காப்பியங்கள் இலியட், ஒதீசி ஆகியவை இத்தகைய கதைகளின் வளர்ச்சி நிலை என்பர். இராமாயணக் காப்பியமும் இத்தகைய வளர்ச்சி நிலையில் தோன்றியதுதான்.


உலகக் காப்பியங்கள் பலவும் வாய்மொழிக் கதைகளின் வளர்ச்சி நிலை என்பது மில்மன் பரி (Milmen Parry) போன்ற அறிஞர்களின் கருத்து. இத்தகைய காப்பியத்தை வளர்ச்சிக் காப்பியம் (Epic of Growth) என்று குறிப்பிடுவர்.

வாய்மொழி இலக்கியம்


வாய்மொழி இலக்கியங்கள், மனனம் பண்ணுதலிலும், நினைவாற்றலிலும் சிறப்புற்றோரின் மனத்தில் மட்டுமே பதிவு செய்யப்பட்டு வாழ்ந்து வந்தன. செவிவழிச் செய்திகளாக இத்தகையோர் இடையே பரிமாறப்பட்டு வளர்ந்தன. வழிவழியாக வந்த கர்ண பரம்பரைக் கதைகள் என மக்களிடம் செல்வாக்குப் பெற்று வாழ்ந்தும் - வளர்ந்தும் வந்தன. இவற்றில் அவ்வப்போது செய்திகளைக் கூட்டலும் கழித்தலும் உண்டு. சுய கற்பனைக்கும் வாய்ப்புண்டு. மக்கள் ஊர் விட்டு ஊர் இடம் பெயர்ந்து செல்லும்போது வாய்மொழி இலக்கியங்களும் இடம் பெயர்ந்து சென்றன; செல்வாக்குப் பெற்றன. கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும், ஓலைச் சுவடிகளிலும் பதிவு பெறும் வரையிலும் செவிவழிச் செய்திகளாகவே வாய்மொழி இலக்கியங்கள் வாழ்ந்தன. அதன் பின்னர், நவீன அறிவியல் கண்டு பிடிப்பான அச்சு இயந்திர அறிமுகத்தால் ஏற்பட்ட அச்சிடுதல் வந்த பின்னரும் (எழுத்து வடிவிற்கு வந்த பின்னரும்) வாய்மொழி இலக்கியம் நாட்டுப்புறவியலாக வளர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது.


மகிழ்வூட்டலும் துதிபாடலும்


நிலவுடைமைச் சமுதாயத்தில் (Federal Society), முன்னர்க் குறிப்பிட்டதைப் போல, மகிழ்வூட்டலும், துதிபாடலும் பாடுபொருளாக இருந்தன. தனிநபர் வழிபாடு மிகுந்த இலக்கியங்கள் எழுந்தன. இந்தப் போக்கு முடியாட்சி மன்னர்கள் காலம் வரையிலும் தொடர்ந்தது. புறநானூற்றுப் பாடல்கள் இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாய்த் திகழ்கின்றன. இத்தகைய இலக்கியங்கள் மன்னனின் ஒளி(புகழ்), ஆற்றல், ஈகை, அளி(கருணை) ஆகியவற்றைக் கொண்டாடிப் போற்றின. இதற்காக உருவானதே பாடாண் திணை என்னும் புறத்திணை. 'மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்' என்பதை இலக்கியத்தின் அடிப்படையாகக் கொண்டிருந்தனர்.


காப்பியங்களின் தன்மை


முற்காலத்தில் எழுந்த காப்பியங்களில் வீரமும் இயல்பு மீறிய தன்மைகளும் போற்றப்பட்டன. பின்னர்க் கூர் அறிவு இவ்வாறு போற்றப்பட்டது. இந்த மாற்றத்தை ஒதீசி போன்ற கிரேக்கக் காப்பியங்களில் பார்க்க முடிகிறது. அதன்பின்னர்க் கூர் அறிவு தீய பாத்திரங்களின் இயல்பாகப் படைக்கப்பட்டது. நம்பமுடியாதவற்றையும், இயற்கை இகந்த நிகழ்ச்சிகளையும் (Supernatural Element) மையமாகக் கொண்டு படைக்கப்பட்டு வந்த காப்பியப் போக்கில் படிப்படியாகப் பல மாறுதல்கள் நிகழ்ந்தன. நமக்கோ, நம்மில் ஒருவருக்கோ நடந்தது போன்ற ஓர் உணர்வை ஊட்டுகின்ற நம்பக்கூடிய நடப்பியல் தன்மை (Realism) வாய்ந்த இலக்கியங்களை - காப்பியங்களைப் படைக்கும் போக்கு ஏற்பட்டது. அதற்குச் சிறந்த தமிழ் எடுத்துக்காட்டு சிலப்பதிகாரம். சாதாரண வாழ்வின் இயல்புகள், நடைமுறைகள் பலவற்றை இலக்கியமாக்கியிருப்பதைச் சிலம்பில் காணலாம்.


கவிதையின் செல்வாக்கு


வாய்மொழி இலக்கியத்தைக் கேட்டுச் சுவைத்து வந்த மக்கள், கவிதையையும், கவிதையில் கையாளப்பட்ட சொல்வன்மையையுமே மிகவும் உயர்வாக மதித்தனர். இன்றைக்குள்ள, தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி, பல்லூடக வாய்ப்புகள் இல்லாத கால கட்டத்தில், கவிதை பாடிய புலவர்களே, மக்கள் தேவைகளை நிறைவு செய்பவர்களாகத் திகழ்ந்தனர். எனவே, புலவர்கள் மக்களிடையே மிகவும் செல்வாக்குடையவர்களாக இருந்தனர்.


தொன்மைக் காலத்தில், மனிதனின் அறிவு வெளிப்பாடுகள் முழுவதும், செய்யுள் வடிவிலேயே இருந்தன. மந்திரம், மாயம், வானநூல், வரலாறு, புராணம், இயற்கையறிவு, அறிவியல் முதலிய யாவும் செய்யுள் வடிவிலேயே தோன்றின. பன்னெடுங்காலமாகச் செய்யுள் வடிவிலேயே வழங்கி வந்தன. இவைகள் அனைத்தும் இலக்கியங்கள் அல்ல எனினும் இலக்கியத்திற்குரிய வடிவில் இருந்தன. ஆகவே அந்த வடிவத்திற்குச் செல்வாக்குத் தொடர்ந்து இருந்து வந்தது. இப்போக்கு அச்சுக்கலை அறிமுகமாகி உரைநடை வளர்ச்சியடைவது வரையிலும் தொடர்ந்தது.


உரைநடையின் செல்வாக்கு


ஐரோப்பியர் வருகை தமிழ் இலக்கியத்தில் பல மாறுதல்களை நிகழ்த்தியது. குறிப்பாக உரைநடை வளர்ச்சியில் பெரும் பங்களிப்பைச் செய்தது.


வணிகத்தில் தொடங்கி, சமயம் பரப்ப முற்பட்டு, சமுதாயச் சீர்திருத்தத்தில் பங்கு கொண்டு, இலக்கியப் பணியும் செய்தவர்கள் ஐரோப்பியர்கள். அவர்களால் அறிமுகப் படுத்தப்பட்ட அச்சு இயந்திரம், அதன் வாயிலாக ஏற்பட்ட மாறுதல்கள் தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தின. பாதுகாப்பின்றி, அழிந்தும், மறைந்தும் கொண்டிருந்த ஓலைச் சுவடியிலிருந்த இலக்கியங்களுக்குப் பாதுகாப்பும் புத்துயிரும் அளித்தது அச்சுக்கலை. அச்சடிக்கப்பட்ட நூல்கள், மேலும் பல நூல்கள் உருவாக உறுதுணையாக அமைந்தன. புதிய இலக்கிய வடிவங்கள் தோன்றுவதற்குரிய சூழலை அச்சுக்கலை ஏற்படுத்தியது. நினைவாற்றலிலே வாழ்ந்து, கற்றறிந்தோர் மனத்தில் பதிவு செய்யப்பட்ட செய்யுட்கள் செல்வாக்கு இழந்து, மக்களுக்கு எளிதில் புரியக்கூடிய - மக்களை எளிதில் சென்றடையக் கூடிய உரைநடை வளர்ச்சியடையத் தொடங்கிற்று. ஐரோப்பியர்கள் - குறிப்பாக வீரமாமுனிவர், டாக்டர் கால்டுவெல், டாக்டர் ஜி. யு. போப், சீகன் பால்கு போன்றவர்கள் தமிழ் உரை நடை வளர்ச்சிக்கு ஆற்றிய பணி மிகவும் சிறப்பானது.

இலக்கியம்

இலக்கியப் போக்கு


இலக்கியம் தோன்றுவதற்கு ஒரு பின்புலம் உண்டு என்பது பற்றியும், ஒரு படைப்பாளன் உருவாவதற்கும் பின்புலம் உண்டு என்பது பற்றியும் பார்த்தோம். இதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த இலக்கியப் போக்குப் பற்றி இனிப் பார்ப்போம்.


நாடோடிக் கூட்டமும் இலக்கியமும்


நிலையான குடியிருப்பு அமைத்துக் கொள்ளாமல் அலைந்து திரிந்த நாடோடிக் கூட்டத்தவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில், மக்களை மகிழ்வித்தலையும், பொழுது போக்குதலையும் மட்டுமே நோக்கமாகக் கொண்ட, வாய்மொழி இலக்கியங்கள் தோன்றின. அவற்றில் ஒரு படைப்புக்குரிய படைப்பாளர்கள் பலர் (Collective Authorship). கேட்பவர் எல்லோரும் நுகர்பவர்களாகப் பங்கேற்றனர் (All Listeners Are Audience). கதை சிறப்பிடம் பெற்றது. கேட்பவர்கள் இரவு நேரங்களில் தீயை மூட்டி அதைச் சுற்றி அமர்ந்து கொண்டு கேட்க, கதை சொல்லுதல் மரபாக இருந்தது. இவ்வாறு தீயைச் சுற்றி இருந்து சொன்ன கதையின் வளர்ச்சியே பியோவூல்ப் (BEOWULF) எனும் காப்பியம்.


கதை சொல்பவரின் நினைவாற்றலிலேயே இலக்கியங்கள் வாழ்ந்தன. நினைவாற்றல் மிகுந்தவன், மிகவும் மதிக்கப்பட்டான். எடுத்துரைத்தல், வருணனை போன்றவை சிறப்பிடம் பெற்றன.


நிலவுடைமையும் இலக்கியமும்


நாடோடிக் கூட்டமாக அலைந்து திரிந்த மக்கள், இது எனது அது உனது என உரிமையும் எல்லையும் வரையறை செய்த பொழுது குடியிருப்புத் தொடங்கியது. குடியிருப்பின் வளர்ச்சியாக நிலவுடைமைச் சமுதாயம் உருவாகியது. குழுத்தலைவர்கள் ஆட்சி உருவாகியது. இலக்கியத்தில் துதிபாடலும், மகிழ்வூட்டலும் பாடு பொருள்களாயின.


முடியாட்சியும் இலக்கியமும்


குழுத்தலைவர்கள் குறுநில மன்னர்களாகவும், மன்னர்களாகவும், வளர்ச்சியடைந்த, முடியாட்சி மலர்ந்த காலகட்டத்தில் துதிபாடுதலை மையமாகக் கொண்ட இலக்கியங்கள் தோன்றின. துதிபாடுதல் தன்னிகரற்ற தலைவனை உருவாக்கியது.


குடியாட்சியும் இலக்கியமும்


ஆணவப் போக்குடைய அரசர்களின் ஆட்சிக்கு எதிராகப் போர்க்குரல்கள், போராட்டங்கள் எழுந்தன. சாக்ரட்டீசு போன்ற சமூகச் சிந்தனையாளர்களின் கருத்துகள் செல்வாக்குப் பெற்றன. தட்டிக் கேட்கும் உரிமை குடியாட்சி மலர வாய்ப்பளித்தது. மன்னன் அவனைச் சுற்றியிருந்த சிறு குழுவினர் ஆகியவர்களிடமிருந்து விலகி, வாசகர் வட்டம் விரிவடைந்து கேட்போர் அல்லது படிப்போர் பொதுமக்களாயினர். அச்சு இயந்திர அறிமுகமும், உரைநடை வளர்ச்சியும், புதினம், சிறுகதை, புதுக்கவிதை போன்ற புதிய இலக்கிய வகைகள் தோன்றுவதற்குரிய புதிய சூழலை உருவாக்கின. இலக்கியம் பொதுமக்கள் உடைமைப் பொருளாகியது.


மிகச் சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையிலான எளிமை இலக்கியத்தில் புகுத்தப்பட்டது. பாடுபொருளும், மேல் மட்ட மக்களின் வாழ்க்கை நிலையிலிருந்து நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்க்கைச் சிக்கல்களை - அடிமட்ட மக்களின் வாழ்க்கைப் போராட்டங்களை வெளிப்படுத்துவனவாக அமைந்தன.

இலக்கியம்

உலக அளவில், இன்னதுதான் இலக்கியம் என்னும் வரையறை தோன்றுமுன்பு, எழுதப்பட்டவை எல்லாம் இலக்கியம் என்ற கருத்து ஒரு காலத்தில் நிலவியது. சமயம், வரலாறு, நிலவியல், மருத்துவம் முதலியவையும் இலக்கியங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஏனெனில் இவை எல்லாவற்றுக்கும் வடிவம் ஒரே மாதிரியாக இருந்தது. இவற்றிலிருந்து சமயம் சார்ந்தவற்றை மட்டும் பிரித்து, ஏனையவை இலக்கியம் என்று கூறப்பட்டன. பின்னர்க் கற்பனையும், அழகியலும் சார்ந்தவை தனியாகப் பிரிக்கப்பட்டன. கற்பனைக்கும், உணர்ச்சிக்கும் ஒரு வடிவம் கொடுக்கும் நிலை ஏற்பட்டபோது அது இலக்கியமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.


இலக்கியம் பற்றி அறிஞர்கள் கருத்து


தொடக்க கால ஆங்கிலத் திறனாய்வாளர்களில் ஒருவரான, ஸ்டாப் போர்ட் புரூக் (Stopford Brooke) என்பவர், 'கூர் அறிவு படைத்த ஆண்களின் அல்லது பெண்களின் உணர்ச்சிகளையும் எண்ணங்களையும், நுகர்பவன் மகிழும்படி, முறைப்படுத்தி அமைப்பதே இலக்கியம்' என்று கூறினார். மேத்யூ அர்னால்ட் (Mathew Arnold) என்பவர், 'இலக்கியம், காலக்கண்ணாடி' என்றார். 'இலக்கியம் என்பது ஒரு சமுதாயத்தின் வெளிப்பாடு. சமுதாயத்தில் விளைந்து, சமுதாயத்தை இயக்க வல்லது. ஒரு சமுதாயத்தை உருவாக்கும் ஆற்றல் பெற்றது' என்று பொனால்டு (Ponald) எனும் திறனாய்வாளர் குறிப்பிடுகின்றார். மைக்கேல் பக்தின் (Michael Bukthin) எனும் உருசிய நாட்டுத் திறனாய்வாளர், 'சமுதாயம் இலக்கியத்தின் பிரதிபலிப்பு' என்று கூறுகின்றார். இலக்கிய எதேச்சதிகாரி ஜான்சன் (Johnson, The Literary Dictator) என்றும் 'அகராதி ஜான்சன்' என்றும் அழைக்கப்படுகின்ற, பேரறிஞர் டாக்டர் சாமுவேல் ஜான்சன், ‘எது இலக்கியம் இல்லை என்று கூறுவது எளிது; எது இலக்கியம் என்று உணரலாமே தவிர உணர்த்த இயலாது’ என்று குறிப்பிடுகின்றார்.


இவ்வாறு இலக்கியம் என்றால் என்ன என்பதற்குப் பல்வேறு வகையான விளக்கங்கள் அல்லது கருத்துகள் வழங்கி வருகின்றன.


தமிழ் இலக்கியம் உள்ளிட்ட உலக இலக்கியங்கள் அனைத்திலும் மேற்குறிப்பிட்ட அறிஞர்களின் கருத்துகள் செயல்படுவதைக் காணலாம்.


இலக்கியம் தோன்றும் பின்புலம்


ஒவ்வொரு செயலுக்கும் அல்லது ஒவ்வொரு வெளிப்பாட்டிற்கும் ஒரு பின்புலம் உண்டு. ஒரு தனி மனிதனின் மகிழ்ச்சிக்கும், துயரத்திற்கும் ஒரு பின்புலம் உண்டு. அதைப்போல, சமுதாயத்தின் விளைபொருளாகிய இலக்கியம் தோன்றுவதற்கும் உறுதியாக ஒரு பின்புலம் உண்டு.


பிரஞ்சுப் புரட்சியைப் பின்புலமாகக் கொண்டு, சமத்துவம், சகோதரத்துவம், விடுதலை என்ற செய்திகளைப் பரப்பும் நோக்கத்துடன் பல இலக்கியங்கள் தோன்றின. இந்திய நாட்டு விடுதலையைப் பின்புலமாகக் கொண்டும் பல இலக்கியங்கள் உருவாயின.


ஒரு குறிப்பிட்ட பின்புலம் அல்லது சூழல், ஒரு படைப்பு - அதாவது இலக்கியப் படைப்பு தோன்றுவதற்குரிய காரணமாக அமைகிறது. அதைப்போல, ஒரு படைப்பாளன் உருவாவதற்கும் ஒரு பின்புலம் காரணமாக அமையும். பாரதி உருவாகக் காரணமாக இருந்த சமூக, அரசியல் பின்புலங்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள். எனவே, பின்புலம் என்பது படைப்பிற்கும் படைப்பாளனுக்கும் இன்றியமையாத ஒன்றாகும்.

Thursday, October 21, 2010

புற்று நோய்

புற்று நோய் ஏதோ இனம்புரியாத இயற்கை விளைவுகளால் ஏற்படுவதல்ல மாறாக மனிதன் தனக்காக உருவாக்கிக் கொண்ட அதிநவீன வாழ்வுதான் காரணம் என்று மான்செஸ்டர் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மனிதனின் உற்பத்தி நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள உடல்ரீதியான மாற்றங்களே சமீப புற்று நோய்க் கட்டிகளுக்குக் காரணம் என்று இவர்கள் கூறுகின்றனர்.

இதனை உறுதி செய்ய அவர்கள் எகிப்திய மம்மிக்களை தங்களது ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். நூற்றுக்கணக்கான மம்மிக்களை ஆய்வு செய்ததில் ஒரேயொரு மம்மியில் மட்டும் புற்று நோய் இருந்தது உறுதியானது.

பண்டைய எகிப்திய பிரதிகளில் காணப்படும் புற்று நோய்ப் போன்ற நோய்க்கான குறிப்புகள் அனைத்தும் குஷ்ட ரோகத்தினால் ஏற்படும் உடல் ரீதியான அறிகுறிகளை புற்று நோய் என்பதாக அது கூறியுள்ளது என்று இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வின் தலைவரான மைக்கேல் ஸிம்மர்மேன் மாம்மிக்களில் கட்டிகள் இருந்ததற்கான அடையாளம் இல்லை என்பதால் புற்று நோய் அந்தக் காலக்கட்டத்தில் இல்லை என்று கூறமுடியும் என்று கூறுகிறார்.

"இதனால் புற்ற்நோய் அல்லது புற்று நோய் உருவாக்கக் காரணிகள் தொழிற்புரட்சிக்குப் பிந்தைய வாழ்வு முறையே என்று நாம் கருத இடமுண்டு" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

"சுற்றுசூழலில் இயற்கையாக உள்ள எந்த ஒரு கூறும் புற்று நோய்க்கு காரணமாக இருக்கவில்லை. இதனால் இது மனிதனால் ஏற்பட்டுள்ள சீரழிந்த, மாசாகிப்போன சூழ்நிலைகளால் உருவானதே" என்று நாம் கூற முடியும்." என்று சக ஆய்வாளரும் பேராசிரியருமான ரொசாலி டேவிட் கூறுகிறார்.

அதாவது எய்ட்ஸ், புற்று நோய் என்பதெல்லாம் ஆதிகாலம் தொட்டே இருந்து வருபவை என்ற பொய்யை மருத்துவ ஆய்வும் கார்ப்பரேட் ஆய்வும் கூறிவரும் இந்த நிலையில் புற்று நோய்க்கு ஒரு வரலாற்றுப் பார்வையை அளிக்க இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பல்வேறு காலத்தின் உடல்களை ஆய்வு செய்ததில் நவீன சமூகங்களுக்கு கிடைத்த செய்தி என்னவெனில் "புற்று நோய் என்பது மனிதனால் உருவாக்கப்பட்டதே" என்பதுதான் என்று இந்த ஆய்வாளர்கள் அடித்து‌க் கூறுகின்றனர்.

லேப்டாப் வெப்பத்தில் மின்சாரம்

லேப்-டாப்பை பயன்படுத்தும் போது ஏற்படும் வெப்பத்திலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் கருவியை சென்னை அண்ணா பல்கலை இ.சி.இ., மாணவர் கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.

அம்மாணவரை, துணைவேந்தர் மன்னர் ஜவகர் பாராட்டினார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இ.சி.இ., பிரிவில் மூன்றாம் ஆண்டில் படிக்கும் மாணவர் சன்னிசர்மா.

அமெரிக்காவின் இல்லினோயிஸ் பல்கலைக்கழகத்தில் படித்த இம்மாணவர், பின் அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியில் இ.சி.இ., பிரிவில் சேர்ந்தார். சன்னிசர்மா, லேப்-டாப்பை பயன்படுத்தும் போது ஏற்படும் வெப்பத்திலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் புதிய கருவியை கண்டுபிடித்துள்ளார்.

தனது கண்டுபிடிப்பு குறித்து மாணவர் சன்னிசர்மா கூறியதாவது:

லேப்-டாப்பை பயன்படுத்தும் போது, குறிப்பிடத்தக்க அளவு வெப்பம் வெளியாகிறது. இந்த வெப்பத்தை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிட்டேன். கடந்த இரண்டு ஆண்டு முயற்சியின் மூலம் அதில் வெற்றி கண்டுள்ளேன். இதன்படி, ஒரு வகை படிகத்தை பயன்படுத்தி, "லேப்-டாப்'பை பயன்படுத்தும் போது ஏற்படும் வெப்பத்திலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. "பைரோ எலக்டிரிக் எபெக்ட்' என்ற முறையின்படி, வெப்ப சக்தி, மின் சக்தியாக மாற்றப்படுகிறது.லேப்-டாப் வெப்பம் மூலம் 3.8 வோல்ட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதன் மூலம், எல்.இ.டி., பல்பை எரிய வைக்க முடிகிறது. இதற்கு 300 ரூபாய் வரையே செலவானது. இந்த மின்சாரத்தை பயன்படுத்தி லேப்-டாப்பை மீண்டும், மீண்டும் "சார்ஜ்' செய்ய முடியும்.மேலும் மொபைல்போன் உள்ளிட்ட கருவிகளையும் "சார்ஜ்' செய்ய முடியும். இதுமட்டுமின்றி, வாகனங்கள், விமானங்கள் உள்ளிட்ட பல்வேறு வெப்பத்தை உருவாக்கும் கருவிகள் மூலமாகவும் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.என் கண்டுபிடிப்பிற்கு, "பேடன்ட்' வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.

மேலும் குளிரிலிருந்தும் மின்சாரம் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் குறித்தும் ஆராய்ச்சி செய்து வருகிறேன். இவ்வாறு சன்னிசர்மா கூறினார். அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர் முன்பாக, மாணவர் சன்னிசர்மா தனது கண்டுபிடிப்பை செயல்படுத்திக் காட்டினார். அப்போது, லேப்-டாப்பில் இருந்து வெளியாகும் வெப்பத்திலிருந்து உருவான மின்சாரம் மூலமாக, எல்.இ.டி., பல்பு எரிய வைத்து காண்பிக்கப்பட்டது.

அம்மாணவரை துணைவேந்தர் மன்னர் ஜவகர் உள்ளிட்ட பேராசிரியர்கள் பாராட்டினர்.அதேபோல, ஆர்கிடெக்சர் தொடர்பான போட்டியில், "ஸ்கூல் ஆப் ஆர்கிடெக்சர்' தென்மண்டல அளவில் முதல் பரிசு பெற்றுள்ளது. மேலும் பி.ஆர்க்., இறுதியாண்டு மாணவர்கள், பாகிஸ்தானில் நடக்கும் போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் துணைவேந்தர் மன்னர் ஜவகர் பாராட்டினார்.

Template by : kendhin x-template.blogspot.com