Wednesday, October 27, 2010

இலக்கியம்

இலக்கிய வளர்ச்சி


காலங்கள் தோறும் அமைந்த பின்புலங்களால் உருவாகிய படைப்புகள், ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு வகையான போக்கில் வளர்ந்தன.


தொடக்கக் காலத்தில், உண்ட மகிழ்ச்சி அல்லது இன்னோரன்ன மகிழ்ச்சியில் கூட்டமாக இருந்து ஓசை எழுப்பிப் பாடுவது ஒரு மரபாக இருந்தது. அவ்வாறு வாய்மொழிப் பாடல்கள் வளர்ந்தன. பின்னர்ப் பொழுதுபோக்குக் கூறாகக் கதை சொல்லுதலும், சுற்றியிருந்து அதைக் கேட்டலும் மரபாகியது. பிற்காலத்தில் காப்பியங்கள் பல தோன்றுவதற்கு அவை அடிப்படையிட்டன. உலகப் புகழ்பெற்ற ஹோமரின் (Homer) காப்பியங்கள் இலியட், ஒதீசி ஆகியவை இத்தகைய கதைகளின் வளர்ச்சி நிலை என்பர். இராமாயணக் காப்பியமும் இத்தகைய வளர்ச்சி நிலையில் தோன்றியதுதான்.


உலகக் காப்பியங்கள் பலவும் வாய்மொழிக் கதைகளின் வளர்ச்சி நிலை என்பது மில்மன் பரி (Milmen Parry) போன்ற அறிஞர்களின் கருத்து. இத்தகைய காப்பியத்தை வளர்ச்சிக் காப்பியம் (Epic of Growth) என்று குறிப்பிடுவர்.

வாய்மொழி இலக்கியம்


வாய்மொழி இலக்கியங்கள், மனனம் பண்ணுதலிலும், நினைவாற்றலிலும் சிறப்புற்றோரின் மனத்தில் மட்டுமே பதிவு செய்யப்பட்டு வாழ்ந்து வந்தன. செவிவழிச் செய்திகளாக இத்தகையோர் இடையே பரிமாறப்பட்டு வளர்ந்தன. வழிவழியாக வந்த கர்ண பரம்பரைக் கதைகள் என மக்களிடம் செல்வாக்குப் பெற்று வாழ்ந்தும் - வளர்ந்தும் வந்தன. இவற்றில் அவ்வப்போது செய்திகளைக் கூட்டலும் கழித்தலும் உண்டு. சுய கற்பனைக்கும் வாய்ப்புண்டு. மக்கள் ஊர் விட்டு ஊர் இடம் பெயர்ந்து செல்லும்போது வாய்மொழி இலக்கியங்களும் இடம் பெயர்ந்து சென்றன; செல்வாக்குப் பெற்றன. கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும், ஓலைச் சுவடிகளிலும் பதிவு பெறும் வரையிலும் செவிவழிச் செய்திகளாகவே வாய்மொழி இலக்கியங்கள் வாழ்ந்தன. அதன் பின்னர், நவீன அறிவியல் கண்டு பிடிப்பான அச்சு இயந்திர அறிமுகத்தால் ஏற்பட்ட அச்சிடுதல் வந்த பின்னரும் (எழுத்து வடிவிற்கு வந்த பின்னரும்) வாய்மொழி இலக்கியம் நாட்டுப்புறவியலாக வளர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது.


மகிழ்வூட்டலும் துதிபாடலும்


நிலவுடைமைச் சமுதாயத்தில் (Federal Society), முன்னர்க் குறிப்பிட்டதைப் போல, மகிழ்வூட்டலும், துதிபாடலும் பாடுபொருளாக இருந்தன. தனிநபர் வழிபாடு மிகுந்த இலக்கியங்கள் எழுந்தன. இந்தப் போக்கு முடியாட்சி மன்னர்கள் காலம் வரையிலும் தொடர்ந்தது. புறநானூற்றுப் பாடல்கள் இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாய்த் திகழ்கின்றன. இத்தகைய இலக்கியங்கள் மன்னனின் ஒளி(புகழ்), ஆற்றல், ஈகை, அளி(கருணை) ஆகியவற்றைக் கொண்டாடிப் போற்றின. இதற்காக உருவானதே பாடாண் திணை என்னும் புறத்திணை. 'மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்' என்பதை இலக்கியத்தின் அடிப்படையாகக் கொண்டிருந்தனர்.


காப்பியங்களின் தன்மை


முற்காலத்தில் எழுந்த காப்பியங்களில் வீரமும் இயல்பு மீறிய தன்மைகளும் போற்றப்பட்டன. பின்னர்க் கூர் அறிவு இவ்வாறு போற்றப்பட்டது. இந்த மாற்றத்தை ஒதீசி போன்ற கிரேக்கக் காப்பியங்களில் பார்க்க முடிகிறது. அதன்பின்னர்க் கூர் அறிவு தீய பாத்திரங்களின் இயல்பாகப் படைக்கப்பட்டது. நம்பமுடியாதவற்றையும், இயற்கை இகந்த நிகழ்ச்சிகளையும் (Supernatural Element) மையமாகக் கொண்டு படைக்கப்பட்டு வந்த காப்பியப் போக்கில் படிப்படியாகப் பல மாறுதல்கள் நிகழ்ந்தன. நமக்கோ, நம்மில் ஒருவருக்கோ நடந்தது போன்ற ஓர் உணர்வை ஊட்டுகின்ற நம்பக்கூடிய நடப்பியல் தன்மை (Realism) வாய்ந்த இலக்கியங்களை - காப்பியங்களைப் படைக்கும் போக்கு ஏற்பட்டது. அதற்குச் சிறந்த தமிழ் எடுத்துக்காட்டு சிலப்பதிகாரம். சாதாரண வாழ்வின் இயல்புகள், நடைமுறைகள் பலவற்றை இலக்கியமாக்கியிருப்பதைச் சிலம்பில் காணலாம்.


கவிதையின் செல்வாக்கு


வாய்மொழி இலக்கியத்தைக் கேட்டுச் சுவைத்து வந்த மக்கள், கவிதையையும், கவிதையில் கையாளப்பட்ட சொல்வன்மையையுமே மிகவும் உயர்வாக மதித்தனர். இன்றைக்குள்ள, தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி, பல்லூடக வாய்ப்புகள் இல்லாத கால கட்டத்தில், கவிதை பாடிய புலவர்களே, மக்கள் தேவைகளை நிறைவு செய்பவர்களாகத் திகழ்ந்தனர். எனவே, புலவர்கள் மக்களிடையே மிகவும் செல்வாக்குடையவர்களாக இருந்தனர்.


தொன்மைக் காலத்தில், மனிதனின் அறிவு வெளிப்பாடுகள் முழுவதும், செய்யுள் வடிவிலேயே இருந்தன. மந்திரம், மாயம், வானநூல், வரலாறு, புராணம், இயற்கையறிவு, அறிவியல் முதலிய யாவும் செய்யுள் வடிவிலேயே தோன்றின. பன்னெடுங்காலமாகச் செய்யுள் வடிவிலேயே வழங்கி வந்தன. இவைகள் அனைத்தும் இலக்கியங்கள் அல்ல எனினும் இலக்கியத்திற்குரிய வடிவில் இருந்தன. ஆகவே அந்த வடிவத்திற்குச் செல்வாக்குத் தொடர்ந்து இருந்து வந்தது. இப்போக்கு அச்சுக்கலை அறிமுகமாகி உரைநடை வளர்ச்சியடைவது வரையிலும் தொடர்ந்தது.


உரைநடையின் செல்வாக்கு


ஐரோப்பியர் வருகை தமிழ் இலக்கியத்தில் பல மாறுதல்களை நிகழ்த்தியது. குறிப்பாக உரைநடை வளர்ச்சியில் பெரும் பங்களிப்பைச் செய்தது.


வணிகத்தில் தொடங்கி, சமயம் பரப்ப முற்பட்டு, சமுதாயச் சீர்திருத்தத்தில் பங்கு கொண்டு, இலக்கியப் பணியும் செய்தவர்கள் ஐரோப்பியர்கள். அவர்களால் அறிமுகப் படுத்தப்பட்ட அச்சு இயந்திரம், அதன் வாயிலாக ஏற்பட்ட மாறுதல்கள் தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தின. பாதுகாப்பின்றி, அழிந்தும், மறைந்தும் கொண்டிருந்த ஓலைச் சுவடியிலிருந்த இலக்கியங்களுக்குப் பாதுகாப்பும் புத்துயிரும் அளித்தது அச்சுக்கலை. அச்சடிக்கப்பட்ட நூல்கள், மேலும் பல நூல்கள் உருவாக உறுதுணையாக அமைந்தன. புதிய இலக்கிய வடிவங்கள் தோன்றுவதற்குரிய சூழலை அச்சுக்கலை ஏற்படுத்தியது. நினைவாற்றலிலே வாழ்ந்து, கற்றறிந்தோர் மனத்தில் பதிவு செய்யப்பட்ட செய்யுட்கள் செல்வாக்கு இழந்து, மக்களுக்கு எளிதில் புரியக்கூடிய - மக்களை எளிதில் சென்றடையக் கூடிய உரைநடை வளர்ச்சியடையத் தொடங்கிற்று. ஐரோப்பியர்கள் - குறிப்பாக வீரமாமுனிவர், டாக்டர் கால்டுவெல், டாக்டர் ஜி. யு. போப், சீகன் பால்கு போன்றவர்கள் தமிழ் உரை நடை வளர்ச்சிக்கு ஆற்றிய பணி மிகவும் சிறப்பானது.

0 comments:

Template by : kendhin x-template.blogspot.com