Wednesday, October 27, 2010

இலக்கியம்

உலக அளவில், இன்னதுதான் இலக்கியம் என்னும் வரையறை தோன்றுமுன்பு, எழுதப்பட்டவை எல்லாம் இலக்கியம் என்ற கருத்து ஒரு காலத்தில் நிலவியது. சமயம், வரலாறு, நிலவியல், மருத்துவம் முதலியவையும் இலக்கியங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஏனெனில் இவை எல்லாவற்றுக்கும் வடிவம் ஒரே மாதிரியாக இருந்தது. இவற்றிலிருந்து சமயம் சார்ந்தவற்றை மட்டும் பிரித்து, ஏனையவை இலக்கியம் என்று கூறப்பட்டன. பின்னர்க் கற்பனையும், அழகியலும் சார்ந்தவை தனியாகப் பிரிக்கப்பட்டன. கற்பனைக்கும், உணர்ச்சிக்கும் ஒரு வடிவம் கொடுக்கும் நிலை ஏற்பட்டபோது அது இலக்கியமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.


இலக்கியம் பற்றி அறிஞர்கள் கருத்து


தொடக்க கால ஆங்கிலத் திறனாய்வாளர்களில் ஒருவரான, ஸ்டாப் போர்ட் புரூக் (Stopford Brooke) என்பவர், 'கூர் அறிவு படைத்த ஆண்களின் அல்லது பெண்களின் உணர்ச்சிகளையும் எண்ணங்களையும், நுகர்பவன் மகிழும்படி, முறைப்படுத்தி அமைப்பதே இலக்கியம்' என்று கூறினார். மேத்யூ அர்னால்ட் (Mathew Arnold) என்பவர், 'இலக்கியம், காலக்கண்ணாடி' என்றார். 'இலக்கியம் என்பது ஒரு சமுதாயத்தின் வெளிப்பாடு. சமுதாயத்தில் விளைந்து, சமுதாயத்தை இயக்க வல்லது. ஒரு சமுதாயத்தை உருவாக்கும் ஆற்றல் பெற்றது' என்று பொனால்டு (Ponald) எனும் திறனாய்வாளர் குறிப்பிடுகின்றார். மைக்கேல் பக்தின் (Michael Bukthin) எனும் உருசிய நாட்டுத் திறனாய்வாளர், 'சமுதாயம் இலக்கியத்தின் பிரதிபலிப்பு' என்று கூறுகின்றார். இலக்கிய எதேச்சதிகாரி ஜான்சன் (Johnson, The Literary Dictator) என்றும் 'அகராதி ஜான்சன்' என்றும் அழைக்கப்படுகின்ற, பேரறிஞர் டாக்டர் சாமுவேல் ஜான்சன், ‘எது இலக்கியம் இல்லை என்று கூறுவது எளிது; எது இலக்கியம் என்று உணரலாமே தவிர உணர்த்த இயலாது’ என்று குறிப்பிடுகின்றார்.


இவ்வாறு இலக்கியம் என்றால் என்ன என்பதற்குப் பல்வேறு வகையான விளக்கங்கள் அல்லது கருத்துகள் வழங்கி வருகின்றன.


தமிழ் இலக்கியம் உள்ளிட்ட உலக இலக்கியங்கள் அனைத்திலும் மேற்குறிப்பிட்ட அறிஞர்களின் கருத்துகள் செயல்படுவதைக் காணலாம்.


இலக்கியம் தோன்றும் பின்புலம்


ஒவ்வொரு செயலுக்கும் அல்லது ஒவ்வொரு வெளிப்பாட்டிற்கும் ஒரு பின்புலம் உண்டு. ஒரு தனி மனிதனின் மகிழ்ச்சிக்கும், துயரத்திற்கும் ஒரு பின்புலம் உண்டு. அதைப்போல, சமுதாயத்தின் விளைபொருளாகிய இலக்கியம் தோன்றுவதற்கும் உறுதியாக ஒரு பின்புலம் உண்டு.


பிரஞ்சுப் புரட்சியைப் பின்புலமாகக் கொண்டு, சமத்துவம், சகோதரத்துவம், விடுதலை என்ற செய்திகளைப் பரப்பும் நோக்கத்துடன் பல இலக்கியங்கள் தோன்றின. இந்திய நாட்டு விடுதலையைப் பின்புலமாகக் கொண்டும் பல இலக்கியங்கள் உருவாயின.


ஒரு குறிப்பிட்ட பின்புலம் அல்லது சூழல், ஒரு படைப்பு - அதாவது இலக்கியப் படைப்பு தோன்றுவதற்குரிய காரணமாக அமைகிறது. அதைப்போல, ஒரு படைப்பாளன் உருவாவதற்கும் ஒரு பின்புலம் காரணமாக அமையும். பாரதி உருவாகக் காரணமாக இருந்த சமூக, அரசியல் பின்புலங்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள். எனவே, பின்புலம் என்பது படைப்பிற்கும் படைப்பாளனுக்கும் இன்றியமையாத ஒன்றாகும்.

0 comments:

Template by : kendhin x-template.blogspot.com