Wednesday, October 27, 2010

இலக்கியம்

இலக்கியப் போக்கு


இலக்கியம் தோன்றுவதற்கு ஒரு பின்புலம் உண்டு என்பது பற்றியும், ஒரு படைப்பாளன் உருவாவதற்கும் பின்புலம் உண்டு என்பது பற்றியும் பார்த்தோம். இதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த இலக்கியப் போக்குப் பற்றி இனிப் பார்ப்போம்.


நாடோடிக் கூட்டமும் இலக்கியமும்


நிலையான குடியிருப்பு அமைத்துக் கொள்ளாமல் அலைந்து திரிந்த நாடோடிக் கூட்டத்தவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில், மக்களை மகிழ்வித்தலையும், பொழுது போக்குதலையும் மட்டுமே நோக்கமாகக் கொண்ட, வாய்மொழி இலக்கியங்கள் தோன்றின. அவற்றில் ஒரு படைப்புக்குரிய படைப்பாளர்கள் பலர் (Collective Authorship). கேட்பவர் எல்லோரும் நுகர்பவர்களாகப் பங்கேற்றனர் (All Listeners Are Audience). கதை சிறப்பிடம் பெற்றது. கேட்பவர்கள் இரவு நேரங்களில் தீயை மூட்டி அதைச் சுற்றி அமர்ந்து கொண்டு கேட்க, கதை சொல்லுதல் மரபாக இருந்தது. இவ்வாறு தீயைச் சுற்றி இருந்து சொன்ன கதையின் வளர்ச்சியே பியோவூல்ப் (BEOWULF) எனும் காப்பியம்.


கதை சொல்பவரின் நினைவாற்றலிலேயே இலக்கியங்கள் வாழ்ந்தன. நினைவாற்றல் மிகுந்தவன், மிகவும் மதிக்கப்பட்டான். எடுத்துரைத்தல், வருணனை போன்றவை சிறப்பிடம் பெற்றன.


நிலவுடைமையும் இலக்கியமும்


நாடோடிக் கூட்டமாக அலைந்து திரிந்த மக்கள், இது எனது அது உனது என உரிமையும் எல்லையும் வரையறை செய்த பொழுது குடியிருப்புத் தொடங்கியது. குடியிருப்பின் வளர்ச்சியாக நிலவுடைமைச் சமுதாயம் உருவாகியது. குழுத்தலைவர்கள் ஆட்சி உருவாகியது. இலக்கியத்தில் துதிபாடலும், மகிழ்வூட்டலும் பாடு பொருள்களாயின.


முடியாட்சியும் இலக்கியமும்


குழுத்தலைவர்கள் குறுநில மன்னர்களாகவும், மன்னர்களாகவும், வளர்ச்சியடைந்த, முடியாட்சி மலர்ந்த காலகட்டத்தில் துதிபாடுதலை மையமாகக் கொண்ட இலக்கியங்கள் தோன்றின. துதிபாடுதல் தன்னிகரற்ற தலைவனை உருவாக்கியது.


குடியாட்சியும் இலக்கியமும்


ஆணவப் போக்குடைய அரசர்களின் ஆட்சிக்கு எதிராகப் போர்க்குரல்கள், போராட்டங்கள் எழுந்தன. சாக்ரட்டீசு போன்ற சமூகச் சிந்தனையாளர்களின் கருத்துகள் செல்வாக்குப் பெற்றன. தட்டிக் கேட்கும் உரிமை குடியாட்சி மலர வாய்ப்பளித்தது. மன்னன் அவனைச் சுற்றியிருந்த சிறு குழுவினர் ஆகியவர்களிடமிருந்து விலகி, வாசகர் வட்டம் விரிவடைந்து கேட்போர் அல்லது படிப்போர் பொதுமக்களாயினர். அச்சு இயந்திர அறிமுகமும், உரைநடை வளர்ச்சியும், புதினம், சிறுகதை, புதுக்கவிதை போன்ற புதிய இலக்கிய வகைகள் தோன்றுவதற்குரிய புதிய சூழலை உருவாக்கின. இலக்கியம் பொதுமக்கள் உடைமைப் பொருளாகியது.


மிகச் சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையிலான எளிமை இலக்கியத்தில் புகுத்தப்பட்டது. பாடுபொருளும், மேல் மட்ட மக்களின் வாழ்க்கை நிலையிலிருந்து நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்க்கைச் சிக்கல்களை - அடிமட்ட மக்களின் வாழ்க்கைப் போராட்டங்களை வெளிப்படுத்துவனவாக அமைந்தன.

0 comments:

Template by : kendhin x-template.blogspot.com